Thursday 15 August 2013

எங்களின் ஜூ பயணம்.

ஆந்திரா வந்த 35 வருடங்களில் வீட்டில் உறவினர்கள் வந்தபோதும்  பிறகு பள்ளியில் வேலைபார்க்கும்போதும் பலமுறை ஜூ சென்று வந்தேன். அவையெல்லாம்   தனித்தனி அனுபவங்கள்.  பள்ளியில் குழந்தைகளை  அழைத்துக் கொண்டு போகும்போது அவர்கள் மீதே நம் கண்கள் இருக்கும் நல்லபடியாக அவர்களை மீண்டும் அவர்களின் பெற்றோர்களிடம் சேர்க்க வேண்டுமே என்று அதனால் அதிகம்  ரசிக்க முடியாது. பல வருடங்களுக்குப் பிறகு நேற்று  நானும் என் பிள்ளையும் மாத்திரம் சென்றோம்.  காலை 8.30 க்கு டிபன் சாப்பிட்டுவிட்டு  மதியம் லஞ்சுக்கு தக்காளி சாதம்  சிப்ஸ்  தயிர் சாதம் ஊறுகாய்  எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.  அங்கு போய் சேர்ந்தபோது மணி 9.30/  அருமையான வானிலை
எங்கள் ஜூ வின் பெயர்   நேரு ஜூவாலிஜிகல் பார்க்.  


முதன் முதலில் நமது மூதாதையர்களிடமிருந்து ஆரம்பித்தோம்.   ஆம்   சிம்பன்சி, ஒராங்குட்டான்   பாபூன்  என பெரிய வகை குரங்குகளுடன்  பல விதமான சிறிய வகைக் குரங்குகளும்  தாவித் தாவி விளையாடுவதை  ரசித்தோம். பிறகு  எங்கள் ஜூவின் சீனியர் சிட்டிசன் என்று அழைக்கப்படும்  300 வருடங்கள் வயதான இராட்சச ஆமைகள்     அதற்கு அடுத்த பகுதி ஜூராசிக் பார்க் என்னும் பகுதியில் ஆதிகாலத்தில் இருந்த பெரிய பெரிய டைனோசர்களின் பிரமாண்டமான  பொம்மைகள்.  அதை பார்த்துவிட்டு நாங்கள் நுழைந்தது   பட்டாம்பூச்சிகளின் உலகம். எட்டு நாட்களே வாழ்க்கை என்றலும் பல வண்ணங்களில் பறந்து திரியும் இந்த வண்ணத்துப் பூச்சிகளின் அழகை எப்படி வர்ணிப்பதென்றே தெரியவில்லை.  அவை பட்டாம் பூச்சிகளா  பறக்கும் நகைகளா? என்றே புரியவில்லை.எத்தனை வடிவங்கள்  எத்தனை வண்ணங்கள்   ஆண்டவனின் சிருஷ்டியை என்னவென்று சொல்வது.  பிரிய மனமில்லாமலே வெளியே வந்தோம்.

அடுத்தது  பறவைகளின் உலகம்   சிறிய ஹம்மிங் பறவையிளிருந்து  நமது தேசிய பறவை மயில் வரையிலும் விதவிதமான பலநாட்டுப்  பறவைகளையும் பார்க்க இரண்டு கண்கள் போதவில்லை. அதிலும் தோகையை விரித்தாடிய மயிலின் அழகோ  அழகு..  கீச்சு கீச்சு என்று கத்திக்கொண்டு நாள்முழுவதும் சந்தோஷமாக இருக்கும் அவைகளைப் பார்க்கும்போது அவைகளின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.   அடுத்ததாக காட்சிக்கு வந்தது நீர்யானையும்   காண்டாமிருகமும்     எத்தனை பெரிய உருவம் ஆனால் எத்தனை சாதுவான மிருகம்.  தானுண்டு தனது வேலையுண்டு என்று தன்போக்கில் இருக்கும் மிருகங்கள்

அடித்தாக நாங்கள் கூண்டு வேனில் அமர்ந்து   சுதந்திரமாகத் திரியும் சிங்கங்களையும் புலிகளையும் கரடி மற்றும் காட்டு எருமைகளையும் கண்டு களித்தோம். பிடரியை சிலிப்புக்கொண்டு ராஜ நடை பயிலும் சிங்கத்தைப் பார்த்தபோது காட்டின் ராஜா என அதனைக் கூறுவது எத்தனை உண்மை என்று புரிந்தது.  அதன் கம்பீரமும்  தீட்சண்யமான கண்களும் நம்மில் பயத்தை உருவாக்கிறது. சிறுத்தைப்புலிகளும்   வங்காளப் புலிகளும் வலம் வருவது கண்ணுக்கு விருந்து.  எந்த மாநிலத்திலும் இல்லாத  வெள்ளைப் புலி எங்கள் ஊரில் உண்டு.  வெள்ளை வெளேரென்று கறுப்புக் கோடுகளுடன்   அதன் கம்பீரமாக நடையே தனி அழகு.

அடுத்ததாக நாங்கள் நுழைந்த இடம் ஊர்வன உள்ள இடம்.  இதில் பலவிதமான பாம்புகள். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது உண்மைதான். கண்ணாடி திரைக்குள் பாதுகாப்பாக வைக்கப் பட்டு இருந்தாலும்  பார்க்கும் போதே உதறல் எடுப்பது என்னவோ உண்மை. இரை தின்று முடித்து அசையாமல் கிடக்கும் பபைத்தான் பாம்புகள்   பலவிதம்மான ஓணான்கள்  பல்லிகள்  நிறத்திற்கு ஏற்றாற்போல் நிறம் மாறும் பச்சோந்திகள்  மற்றும் நட்சத்திர ஆமைகள் என எல்லாவற்றையும் பாத்தோம். படம் பிடித்தோம்.  இங்குள்ள புகைப்படங்கள் அனைத்தும் நாங்கள் எடுத்தவைதான்.

வழியில் ஒரு சின்ன அறையில் இரவில்  மட்டுமே இரை தேடும்  ஆந்தை   முள்ளம்பன்றிகள்  பெரிய வடிவில் உள்ள எலிகள் என சிலவற்றை பார்த்து பிரமித்தோம்.  பிறகு நாங்கள் சென்றது   நீரிலேயே காலம் முழுதும் வாழும் மீன்களின் உலகம். நமது நெற்றியில் உள்ள பொட்டின் அளவிலிருந்து ஐந்து அல்லது ஆறடி நீளமும் நல்ல அகலமும் உள்ள மீன்கள் வரை வண்ண வண்ண மீன்கள் அயராமல் நீந்துவதை ஆச்சர்யமாகப் பார்த்தோம்.  நிலத்தில் மேலே ஓர் உலகம் என்றால் நீருக்குள் இத்தனை அற்புதமான ஓர் உலகைப் படைத்த அந்த இறைவனைப் பாராட்டுவதா? அல்லது இத்தனை அற்புதங்களையும் கண்டு களிக்க நமக்கு கண்கள் என்ற உறுப்புகளைத் தந்ததற்காக நன்றி சொல்வதா? எனத் தெரியாமலே  மாலை ஐந்து மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.

சித்திரத்துக் கொக்கு 

சனி பகவானைப் பற்றிய புராணக் கதைகள் பல உண்டு. அதேபோல் செவிவழி கேட்ட கதைகளும் உண்டு. அவற்றில் இது ஒன்று. ஒரு மன்னன் தன நாட்டில் வாழும் ஒரு பொற்கொல்லரை தன அரண்மனைக்கு அழைத்து அவரிடம் சில இரத்தினக்  கற்களைக் கொடுத்து " இதற்கு இன்ன விலை கொடுக்கலாம்? மதிப்பிட்டுச் சொல்லுங்கள்" என்றான்.  அதைப் பெற்றுக்கொண்ட பொற்கொல்லர் " மன்னா இவற்றை எடுத்துச் சென்று சோதித்து மதிப்பை நிர்ணயித்து நாளை வந்து சொல்லுகிறேன்" என்று கூறி வீட்டுக்குச் சென்றார்.

அப்போது அந்தி நேரம். வீட்டுச் சுவரில் உள்ள முக்கோண விளக்கு மாடத்தில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கின் வெளிச்சத்தில் கையில் இருந்த இரத்தினக் கற்களை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தார் பொற்கொல்லர். மாடத்தில் அருகில் ஒரு கொக்கு சித்திரம் வரையப்பட்டிருந்தது. திடீரென அந்தக் கொக்கு சித்திரத்துக்கு உயிர் வந்து அவரது கையில் இருந்த இரத்தினங்களை தன அலகால் கொத்தி விழுங்கிவிட்டு மீண்டும் முன் போலவே சுவர் சித்திரமாக மாறிவிட்டது.  அதிர்ச்சியுற்ற பொற்கொல்லர் உடனே தன ஜாதகத்தை எடுத்துப் பார்த்தார். அன்று அவருக்கு ஏழரை  சனி ஆரம்பம் என்று தெரிந்தது. " நாளை மன்னன் முகத்தில் எப்படி முழிப்பது? நடந்ததைச் சொன்னாள் அவர் நம்புவாரா? " என்று யோசித்து மிகவும் வருத்தப்பட்டு அன்று இரவே காட்டுக்கு சென்றுவிட்டார். செய்தி மன்னருக்கு எட்டியது. அந்தப் பொற்கொல்லரின்  மனைவி, மகளைக் கைது செய்து சிறையிலடைத்த மன்னர் பொற்கொல்லரைப் பிடிக்க ஆட்களை அனுப்பினார். ஆனாலும் அவரைப் பிடிக்க முடியவில்லை.  ஏழரைச் சனி முடியும் வேளை வந்தது. பசி பட்டினியுடனும் தாடி மீசையுடனும் காட்டில் திரிந்ததால் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார். 

இதன்பின் வீட்டுக்கு வந்து குளித்து  சனி பகவானைத் தியானித்து சுவரிலே வரையப்பட்டிருந்த கொக்கு சித்திரத்தைப் பார்த்து கை நீட்டியபடியே "சித்திரத்துக் கொக்கே இரத்தினத்தைக் கக்கு " என்றார் பொற்கொல்லர். என்ன ஆச்சர்யம்? அந்த சித்திரத்துக் கொக்குக்கு உயிர் வந்து  இரத்தினங்களை அவரது கையில் கக்கி விட்டு மீண்டும் சுவர்ச் சித்திரமாக மாறியது. இரவு சோதனைக்காக மாறுவேடத்தில் வந்த மன்னர் மறைவில் நின்று நடந்தவற்றைப் பார்த்தார். உடனே பொற்கொல்லரை வணங்கி நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டதுடன் நாட்டின் முதலமைச்சர் பதவியையும் அவருக்குக் கொடுத்தார். அவரது மகளையும் மணந்து கொண்டார்.

ஏழரை ஆண்டுச் சனி முடிகின்ற வேளையில் ஜென்ம ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே நற்பலன்களை வாரி வழங்க ஆரம்பித்து விடுவார். இதையே சனியைப் போல் கொடுப்பவனும் இல்லை சனியைப் போல் கெடுப்பவனும் இல்லை என்பார்கள். 
மீன் சொன்ன பதில் 

ஒருமுறை  நாரதர் பெரும் துக்கத்தில் இருந்தார். எவ்வளவோ முயன்றும் அந்த துக்கத்திலிருந்து மூல முடியாமல் தவித்தார். இதற்கான  காரணம் என்னவாக இருக்கும் இன்று குழம்பி இறுதியில் மகா விஷ்ணுவைச் சரணடைந்தார்.  மகாவிஷ்ணு நாரதரை பார்த்து " பேரானந்த ஸ்வரூபமான என் அருகில் இருக்கும் நீ எப்போதும் ஆனந்தமாகவே இருக்க வேண்டும். உன் துயர் நீங்குவதற்கு நீ ரிஷிகேசம் செல். துக்கத்தில் இருந்து விடுபடுவாய்" என்று திருவாய் மலர்ந்தருளினார். 

அதன்படி நாரதரும் ரிஷிகேசத்துக்கு புறப்பட்டார். வழியில் கங்கையில் நீராடியபோது ஒரு மீன் நாரதர் அருகில் வந்தது. நாரதர் அந்த மீனிடம் " என்ன மீனே நலமாக உள்ளாயா? " என்று கேட்டார். " நாரதரே தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் மிகவும் துன்புறுகிறேன்" என்றது மீன் சோகமாக. இதைக் கேட்ட நாரதர்  " " முட்டாள் மீனே என்ன பிதற்றுகிறாய்? தண்ணீரில் இருந்துகொண்டே தாகத்தால் துன்பப்படுகிறாயா? " என்றார். " ஆனந்த அமிர்த வடிவான விஷ்ணு பகவானின் அருகிலேயே இருந்து கொண்டு தாங்கள் துன்பப்படுவதை விட இது ஒன்றும் வியப்பில்லையே? ' என்றது அந்த மீன். பகவானின் சாந்நித்யத்தை தான் மறந்ததே தன்னுடைய துயருக்குக் காரணம் என்பதை நாரதர் உணர்ந்த மறுகணமே அந்த மீன் மகாவிஷ்ணுவாகக் காட்சி அளித்தது. 

தன்னைச் சரணடைந்தவர்களைக் காத்து அருள்பாலிக்கும் கருணைக் கடலான அவரின் தரிசனத்தால் துக்கத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடைந்தார் நாரதர்.