Thursday, 15 August 2013

மீன் சொன்ன பதில் 

ஒருமுறை  நாரதர் பெரும் துக்கத்தில் இருந்தார். எவ்வளவோ முயன்றும் அந்த துக்கத்திலிருந்து மூல முடியாமல் தவித்தார். இதற்கான  காரணம் என்னவாக இருக்கும் இன்று குழம்பி இறுதியில் மகா விஷ்ணுவைச் சரணடைந்தார்.  மகாவிஷ்ணு நாரதரை பார்த்து " பேரானந்த ஸ்வரூபமான என் அருகில் இருக்கும் நீ எப்போதும் ஆனந்தமாகவே இருக்க வேண்டும். உன் துயர் நீங்குவதற்கு நீ ரிஷிகேசம் செல். துக்கத்தில் இருந்து விடுபடுவாய்" என்று திருவாய் மலர்ந்தருளினார். 

அதன்படி நாரதரும் ரிஷிகேசத்துக்கு புறப்பட்டார். வழியில் கங்கையில் நீராடியபோது ஒரு மீன் நாரதர் அருகில் வந்தது. நாரதர் அந்த மீனிடம் " என்ன மீனே நலமாக உள்ளாயா? " என்று கேட்டார். " நாரதரே தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் மிகவும் துன்புறுகிறேன்" என்றது மீன் சோகமாக. இதைக் கேட்ட நாரதர்  " " முட்டாள் மீனே என்ன பிதற்றுகிறாய்? தண்ணீரில் இருந்துகொண்டே தாகத்தால் துன்பப்படுகிறாயா? " என்றார். " ஆனந்த அமிர்த வடிவான விஷ்ணு பகவானின் அருகிலேயே இருந்து கொண்டு தாங்கள் துன்பப்படுவதை விட இது ஒன்றும் வியப்பில்லையே? ' என்றது அந்த மீன். பகவானின் சாந்நித்யத்தை தான் மறந்ததே தன்னுடைய துயருக்குக் காரணம் என்பதை நாரதர் உணர்ந்த மறுகணமே அந்த மீன் மகாவிஷ்ணுவாகக் காட்சி அளித்தது. 

தன்னைச் சரணடைந்தவர்களைக் காத்து அருள்பாலிக்கும் கருணைக் கடலான அவரின் தரிசனத்தால் துக்கத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடைந்தார் நாரதர். 

No comments:

Post a Comment