Thursday, 15 August 2013

எங்களின் ஜூ பயணம்.

ஆந்திரா வந்த 35 வருடங்களில் வீட்டில் உறவினர்கள் வந்தபோதும்  பிறகு பள்ளியில் வேலைபார்க்கும்போதும் பலமுறை ஜூ சென்று வந்தேன். அவையெல்லாம்   தனித்தனி அனுபவங்கள்.  பள்ளியில் குழந்தைகளை  அழைத்துக் கொண்டு போகும்போது அவர்கள் மீதே நம் கண்கள் இருக்கும் நல்லபடியாக அவர்களை மீண்டும் அவர்களின் பெற்றோர்களிடம் சேர்க்க வேண்டுமே என்று அதனால் அதிகம்  ரசிக்க முடியாது. பல வருடங்களுக்குப் பிறகு நேற்று  நானும் என் பிள்ளையும் மாத்திரம் சென்றோம்.  காலை 8.30 க்கு டிபன் சாப்பிட்டுவிட்டு  மதியம் லஞ்சுக்கு தக்காளி சாதம்  சிப்ஸ்  தயிர் சாதம் ஊறுகாய்  எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.  அங்கு போய் சேர்ந்தபோது மணி 9.30/  அருமையான வானிலை
எங்கள் ஜூ வின் பெயர்   நேரு ஜூவாலிஜிகல் பார்க்.  


முதன் முதலில் நமது மூதாதையர்களிடமிருந்து ஆரம்பித்தோம்.   ஆம்   சிம்பன்சி, ஒராங்குட்டான்   பாபூன்  என பெரிய வகை குரங்குகளுடன்  பல விதமான சிறிய வகைக் குரங்குகளும்  தாவித் தாவி விளையாடுவதை  ரசித்தோம். பிறகு  எங்கள் ஜூவின் சீனியர் சிட்டிசன் என்று அழைக்கப்படும்  300 வருடங்கள் வயதான இராட்சச ஆமைகள்     அதற்கு அடுத்த பகுதி ஜூராசிக் பார்க் என்னும் பகுதியில் ஆதிகாலத்தில் இருந்த பெரிய பெரிய டைனோசர்களின் பிரமாண்டமான  பொம்மைகள்.  அதை பார்த்துவிட்டு நாங்கள் நுழைந்தது   பட்டாம்பூச்சிகளின் உலகம். எட்டு நாட்களே வாழ்க்கை என்றலும் பல வண்ணங்களில் பறந்து திரியும் இந்த வண்ணத்துப் பூச்சிகளின் அழகை எப்படி வர்ணிப்பதென்றே தெரியவில்லை.  அவை பட்டாம் பூச்சிகளா  பறக்கும் நகைகளா? என்றே புரியவில்லை.எத்தனை வடிவங்கள்  எத்தனை வண்ணங்கள்   ஆண்டவனின் சிருஷ்டியை என்னவென்று சொல்வது.  பிரிய மனமில்லாமலே வெளியே வந்தோம்.

அடுத்தது  பறவைகளின் உலகம்   சிறிய ஹம்மிங் பறவையிளிருந்து  நமது தேசிய பறவை மயில் வரையிலும் விதவிதமான பலநாட்டுப்  பறவைகளையும் பார்க்க இரண்டு கண்கள் போதவில்லை. அதிலும் தோகையை விரித்தாடிய மயிலின் அழகோ  அழகு..  கீச்சு கீச்சு என்று கத்திக்கொண்டு நாள்முழுவதும் சந்தோஷமாக இருக்கும் அவைகளைப் பார்க்கும்போது அவைகளின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.   அடுத்ததாக காட்சிக்கு வந்தது நீர்யானையும்   காண்டாமிருகமும்     எத்தனை பெரிய உருவம் ஆனால் எத்தனை சாதுவான மிருகம்.  தானுண்டு தனது வேலையுண்டு என்று தன்போக்கில் இருக்கும் மிருகங்கள்

அடித்தாக நாங்கள் கூண்டு வேனில் அமர்ந்து   சுதந்திரமாகத் திரியும் சிங்கங்களையும் புலிகளையும் கரடி மற்றும் காட்டு எருமைகளையும் கண்டு களித்தோம். பிடரியை சிலிப்புக்கொண்டு ராஜ நடை பயிலும் சிங்கத்தைப் பார்த்தபோது காட்டின் ராஜா என அதனைக் கூறுவது எத்தனை உண்மை என்று புரிந்தது.  அதன் கம்பீரமும்  தீட்சண்யமான கண்களும் நம்மில் பயத்தை உருவாக்கிறது. சிறுத்தைப்புலிகளும்   வங்காளப் புலிகளும் வலம் வருவது கண்ணுக்கு விருந்து.  எந்த மாநிலத்திலும் இல்லாத  வெள்ளைப் புலி எங்கள் ஊரில் உண்டு.  வெள்ளை வெளேரென்று கறுப்புக் கோடுகளுடன்   அதன் கம்பீரமாக நடையே தனி அழகு.

அடுத்ததாக நாங்கள் நுழைந்த இடம் ஊர்வன உள்ள இடம்.  இதில் பலவிதமான பாம்புகள். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது உண்மைதான். கண்ணாடி திரைக்குள் பாதுகாப்பாக வைக்கப் பட்டு இருந்தாலும்  பார்க்கும் போதே உதறல் எடுப்பது என்னவோ உண்மை. இரை தின்று முடித்து அசையாமல் கிடக்கும் பபைத்தான் பாம்புகள்   பலவிதம்மான ஓணான்கள்  பல்லிகள்  நிறத்திற்கு ஏற்றாற்போல் நிறம் மாறும் பச்சோந்திகள்  மற்றும் நட்சத்திர ஆமைகள் என எல்லாவற்றையும் பாத்தோம். படம் பிடித்தோம்.  இங்குள்ள புகைப்படங்கள் அனைத்தும் நாங்கள் எடுத்தவைதான்.

வழியில் ஒரு சின்ன அறையில் இரவில்  மட்டுமே இரை தேடும்  ஆந்தை   முள்ளம்பன்றிகள்  பெரிய வடிவில் உள்ள எலிகள் என சிலவற்றை பார்த்து பிரமித்தோம்.  பிறகு நாங்கள் சென்றது   நீரிலேயே காலம் முழுதும் வாழும் மீன்களின் உலகம். நமது நெற்றியில் உள்ள பொட்டின் அளவிலிருந்து ஐந்து அல்லது ஆறடி நீளமும் நல்ல அகலமும் உள்ள மீன்கள் வரை வண்ண வண்ண மீன்கள் அயராமல் நீந்துவதை ஆச்சர்யமாகப் பார்த்தோம்.  நிலத்தில் மேலே ஓர் உலகம் என்றால் நீருக்குள் இத்தனை அற்புதமான ஓர் உலகைப் படைத்த அந்த இறைவனைப் பாராட்டுவதா? அல்லது இத்தனை அற்புதங்களையும் கண்டு களிக்க நமக்கு கண்கள் என்ற உறுப்புகளைத் தந்ததற்காக நன்றி சொல்வதா? எனத் தெரியாமலே  மாலை ஐந்து மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.

1 comment:

  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    ReplyDelete