சித்திரத்துக் கொக்கு
சனி பகவானைப் பற்றிய புராணக் கதைகள் பல உண்டு. அதேபோல் செவிவழி கேட்ட கதைகளும் உண்டு. அவற்றில் இது ஒன்று. ஒரு மன்னன் தன நாட்டில் வாழும் ஒரு பொற்கொல்லரை தன அரண்மனைக்கு அழைத்து அவரிடம் சில இரத்தினக் கற்களைக் கொடுத்து " இதற்கு இன்ன விலை கொடுக்கலாம்? மதிப்பிட்டுச் சொல்லுங்கள்" என்றான். அதைப் பெற்றுக்கொண்ட பொற்கொல்லர் " மன்னா இவற்றை எடுத்துச் சென்று சோதித்து மதிப்பை நிர்ணயித்து நாளை வந்து சொல்லுகிறேன்" என்று கூறி வீட்டுக்குச் சென்றார்.
அப்போது அந்தி நேரம். வீட்டுச் சுவரில் உள்ள முக்கோண விளக்கு மாடத்தில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கின் வெளிச்சத்தில் கையில் இருந்த இரத்தினக் கற்களை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தார் பொற்கொல்லர். மாடத்தில் அருகில் ஒரு கொக்கு சித்திரம் வரையப்பட்டிருந்தது. திடீரென அந்தக் கொக்கு சித்திரத்துக்கு உயிர் வந்து அவரது கையில் இருந்த இரத்தினங்களை தன அலகால் கொத்தி விழுங்கிவிட்டு மீண்டும் முன் போலவே சுவர் சித்திரமாக மாறிவிட்டது. அதிர்ச்சியுற்ற பொற்கொல்லர் உடனே தன ஜாதகத்தை எடுத்துப் பார்த்தார். அன்று அவருக்கு ஏழரை சனி ஆரம்பம் என்று தெரிந்தது. " நாளை மன்னன் முகத்தில் எப்படி முழிப்பது? நடந்ததைச் சொன்னாள் அவர் நம்புவாரா? " என்று யோசித்து மிகவும் வருத்தப்பட்டு அன்று இரவே காட்டுக்கு சென்றுவிட்டார். செய்தி மன்னருக்கு எட்டியது. அந்தப் பொற்கொல்லரின் மனைவி, மகளைக் கைது செய்து சிறையிலடைத்த மன்னர் பொற்கொல்லரைப் பிடிக்க ஆட்களை அனுப்பினார். ஆனாலும் அவரைப் பிடிக்க முடியவில்லை. ஏழரைச் சனி முடியும் வேளை வந்தது. பசி பட்டினியுடனும் தாடி மீசையுடனும் காட்டில் திரிந்ததால் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார்.
இதன்பின் வீட்டுக்கு வந்து குளித்து சனி பகவானைத் தியானித்து சுவரிலே வரையப்பட்டிருந்த கொக்கு சித்திரத்தைப் பார்த்து கை நீட்டியபடியே "சித்திரத்துக் கொக்கே இரத்தினத்தைக் கக்கு " என்றார் பொற்கொல்லர். என்ன ஆச்சர்யம்? அந்த சித்திரத்துக் கொக்குக்கு உயிர் வந்து இரத்தினங்களை அவரது கையில் கக்கி விட்டு மீண்டும் சுவர்ச் சித்திரமாக மாறியது. இரவு சோதனைக்காக மாறுவேடத்தில் வந்த மன்னர் மறைவில் நின்று நடந்தவற்றைப் பார்த்தார். உடனே பொற்கொல்லரை வணங்கி நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டதுடன் நாட்டின் முதலமைச்சர் பதவியையும் அவருக்குக் கொடுத்தார். அவரது மகளையும் மணந்து கொண்டார்.
ஏழரை ஆண்டுச் சனி முடிகின்ற வேளையில் ஜென்ம ராசிக்கு மூன்றாம் இடத்துக்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே நற்பலன்களை வாரி வழங்க ஆரம்பித்து விடுவார். இதையே சனியைப் போல் கொடுப்பவனும் இல்லை சனியைப் போல் கெடுப்பவனும் இல்லை என்பார்கள்.


.jpg)
.jpg)
No comments:
Post a Comment